Saturday, September 18, 2010

காதல் யுத்தம்


உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!

வாழ்க்கைப் பாடம்.


பிறப்பின் முன்பும் அறியோம்,
இறந்த பின் ஆவதும் அறியோம்,
இருப்பது சொற்ப நாளே
அது மட்டும் திண்ணமாகும்.

ஓடும் புளியம் பழமுமாய்,
வாழ்ந்திடல் கடினமிங்கே,
பற்று வைத்துப் பாசம் காட்டி,
பின் ரத்த விளாறாய்
இதயம் பிளக்கத் தோன்றிடும்
இழப்புக்கெல்லாம் காலமே
மருந்தாம் இங்கே,

கரைகின்ற நாட்களிலே உடல்
காயமது மறைந்துவிடும்
கோபத்தில் சிந்திய வார்த்தைகளும்
நீர்க்கக் கூடும் - தொலைத்த
இழப்புக்கள் மீண்டு வரா,
அனுபவத்தில் நோப்பட்டுத்
தெரிந்ததனால் சொல்கிறேன்....
இன்று கொட்டி நாளை அள்ளி
இன்று முறுகி நாளை சிரித்து,
வதை படும் மனங்களுடன்
எதற்கிந்த நோக்காடு,

வார்த்தைகளைச் சிந்தாதீர், பின்
சிந்தித்துப் பயனில்லை,
நாளை என்பது நிச்சயமாய்
நம் கையில் இங்கில்லை,
இன்றே செய்வோம்
அதை நன்றே செய்வோம்
வாருங்கள் தோழர்களே.

காதல் வந்தது


நான்
உன்னைப் பார்த்து
புன்னகைத்த போதெல்லாம்
நீ
என்னைப் பார்த்ததேயில்லை
யாரோ ஒருத்தி
என்னைப் பார்த்து
புன்னகைக்க
நீ அவளைப் பார்த்து
முறைத்த போதே
புரிந்தேன்
என் மீது உனக்கு
காதல் வந்ததை...!!!

Friday, August 6, 2010

அற்புத விளக்கு

அலாவுதீனுக்குக்
கிடைத்தது போல்
எனக்கும்
கிடைத்தது
ஓர்
அற்புத விளக்கு.
தன்னையேத்
தேய்த்து
தேய்த்து
கவிதையாய்க்
கொட்டும்
அற்புத விளக்கெனில்
யாவர்க்கும்
விளங்குமோ?

கனவு

இரவு
தன்
சிறகுகளை
மடித்துக்
கொண்டிருந்த
விடியலில்
கனவு காண்பதாக
கனவொன்று
கண்டேன்.
கனவில்
வந்த
நான்
கனவு
கண்ட
என்னைப்
போலில்லை
என்ற
பதட்டத்தில்
கனவு
உதறி
துயில்
கலைந்தேன்.

ஒன்று , இரண்டு , மூன்று

1. குல்மொஹர்
உதிர்க்கும்
தீத்துளிகளில்
குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறது
தகிக்கும்
என் காதல்....

2. வேட்டையாடிய
மிருகத்தின்
பக்கத்தில்
நின்று
புகைப்படம்
எடுத்துக்
கொள்பவனை
நினைவூட்டுகிறாய்
என்று
சொல்லிப் போனான்
வென்ற காதலை
மணமுடித்த
அன்று.


3. சுவரிலிட்ட
குழந்தையின்
கிறுக்கல்களில்
தேடினால்
கிடைக்கக் கூடும்
கடவுளின்
கையொப்பம்.

Tuesday, August 3, 2010

ஒரு வார்த்தை கவிதை

"காதல்"

கண்ணற்ற ஆடி

பார்த்தேன்
பார்த்தது
சிரித்தேன்
சிரித்தது
திரும்பினேன்
திரும்பி இருக்கும்
சகிக்காதென்பதால்
பார்க்கவில்லை
எதிர்பட்டவன்
சிரித்தான்
சகிக்கவில்லை-அவன்
முதுகைத்
தேடினேன்

தீக்கடல்

பற்றி எரியும் கடல்
வான் முட்டும் புகை
கருநிற அலைகளில்
கொலுசோட்டம் அவள் தானோ- கால்கள்
தோளும் காலும் பற்றிக் கடலிறங்கும் நான்தானோ - முதுகு
உடலெங்கும் தீயின் சூடு
அதிர்வில் ஆர்ப்பரிக்கும் அலை
அலையற்ற கடல் கரும்பாறை
கலைந்தபின்னும் கனவின் வடு.

தொல்நிகழ்

மரத்தின் நிழலில் நின்று மரத்தை
வெட்டிக்கொண்டிருக்கிறேன்
வேர்வை
விசிறுகிறது கிளைகள்
அதிர்வில்
விரிகிறது வேர்மண்
ஆதிமனிதத் தன்மையில் இன்னும்
வேகமாய் இயங்குகிறேன்
எக்கணமும் விழுந்துவிடும்
விழப்போவது தெரியாமல் என்னைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
கிளைமீது தலைசாய்த்த பறவையொன்று
Related Posts with Thumbnails